"ஐயா சாமி விட்டுடுங்க" டி.எஸ்.பி என்று தெரியாமல் வம்பிழுத்த ஆசாமி..!

0 6329

சென்னையில் உளவுத்துறை டி.எஸ்.பி என்று தெரியாமல் வடிவேலு பாணியில் வம்பிழுத்து தாக்குதலில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது செய்யப்பட்டான்.

இதேபோன்று உளவுத் துறை அதிகாரியிடம், ஒருவர் வீணாக வம்பிழுத்து சிக்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

தமிழக காவல்துறையில் உளவுத்துறை டிஎஸ்பியாக டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் அருளரசு ஜஸ்டின். இவர் மயிலாப்பூரில் உள்ள புதுதெருவிற்கு பணி நிமித்தமாக தனது காரில் சென்றார். வழியில் ஓரிடத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, கடை ஒன்றில் தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்றுள்ளார்.

அவர் திரும்பி வருவதற்குள், அவ்வழியாக பைக்கில் வந்த நபர் ஒருவர், காரை இன்னும் ஓரமாக நகர்த்தி நிறுத்து என ஓட்டுநரை மிரட்டியுள்ளான். ஓட்டுநர் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அங்கு டிஎஸ்பி வந்துவிட, மிரட்டிய நபரிடம் என்ன பிரச்சனை என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர், நீ யார் ? என் ஏரியாவில் உனக்கென்ன வேலை எனக் கேட்டு வம்பிழுத்துள்ளான். அவன் குடிபோதையில் இருந்ததை உணர்ந்து, எச்சரித்த டிஎஸ்பி, அமைதியாக அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றுள்ளார். ஆனால், போதை ஆசாமி, "எங்க ஏரியாவுக்கு வந்து என்னையே போக சொல்றியா, நீ அவ்ளோ பெரிய ஆளா என தகாத வார்த்தையால் திட்டியுள்ளான். அதற்கு டிஎஸ்பி நீ போதையில் இருக்கிறாய் வீட்டிற்கு செல் என கூறியும், கேட்காத அந்த நபர், எதிர்பாராத ஒரு விநாடியில் டி.எஸ்.பியின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அருகில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து அடித்துக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளான்.

அதுவரை பொறுமையாக இருந்த டிஎஸ்பி அருளரசு ஜஸ்டின் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவனை மடக்கிப் பிடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பிறகுதான் குடிபோதையில் அலப்பறை செய்த நபருக்கு தான் வம்பிழுத்தது உளவுத்துறை டிஎஸ்பி என தெரிந்து போதை தெளிந்துள்ளது.

போதையில் தகராறு செய்த அந்த நபர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கும் பிரின்ஸ் பேட்ரிக் என்பதும், தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பவுன்சராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரின்ஸ் பேட்ரிக் மீது மதுரை தல்லாகுளம் மற்றும் செல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உளவுத்துறை டிஎஸ்பியிடம் வம்பிழுத்த பவுன்சர் பிரின்ஸ் பேட்ரிக் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments